செய்திகள்

வங்காளதேசம்: தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டு வெடித்து பலி

Published On 2017-08-15 10:34 GMT   |   Update On 2017-08-15 10:35 GMT
வங்காளதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முஜிபூர் ரஹ்மான் நினைவுநாள் பேரணியின்மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வாலிபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகள் வெடித்து பலியானான்.
டாக்கா:

பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக பாகிஸ்தான் மீது கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா போர் நடத்தியது. இந்தப் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர்.

இதையடுத்து, வங்காளதேசம் என்ற தனிநாடு பிறந்தது, இந்த விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய முஜிபூர் ரஹ்மான் (தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை) வங்காளதேசத்தின் முதல் அதிபராக பொறுப்பேற்றார்.

கடந்த 15-8-1975 அன்று அதிபர் மாளிகைக்குள் பீரங்கி டாங்கிகளுடன் புகுந்த ராணுவ வீரர்கள் முஜிபூர் ரஹ்மான் அவரது குடும்பத்தார் பாதுகாப்பு படையினர் ஆகியோரை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். அப்போது ஜெர்மனி நாட்டுக்கு சென்றிருந்த முஜிபூர் ரஹ்மானின் மகள்கள் ஷேக் ஹசினாம் ஷேக் ரேஹானா ஆகியோர் மட்டும் இந்த தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்தனர்.

ராணுவ புரட்சியின் மூலம் முஜிபூர் ரஹ்மான கொல்லப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் தேசிய துக்க தினமாக வங்காளதேசம் கடைபிடித்து வருகிறது. அவ்வகையில், தலைநகர் டாக்காவில் உள்ள பங்கபந்து அருங்காட்சியகத்தின் அருகே அரசின் சார்பில் இன்று துக்க தினப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த பேரணியின்மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சில தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

துக்கப் பேரணியின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் டாக்கா நகரின் பந்தாபத் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் சில தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அதிரடிப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை கண்டதும்  அங்கிருந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கவைத்து, உடல் சிதறி பலியானான்.

பலியான நபருக்கு சுமார் 20 வயது இருக்கலாம் என்றும் அவன் தங்கியிருந்த அறைக்குள் தீவிரவாதிகள் தொடர்பான சில துண்டு பிரசுரங்கள் காணப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 
Tags:    

Similar News