செய்திகள்
நீதிபதி

இலங்கை: துப்பாக்கிச் சூட்டில் நீதிபதியின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் மரணம்

Published On 2017-07-23 12:52 GMT   |   Update On 2017-07-23 12:52 GMT
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் என்பவரின் உயிரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருந்து காப்பாற்றிய போலீஸ்காரர் குண்டு காயங்களால் மரணம் அடைந்தார்.
கொழும்பு:

இலங்கை புங்குடுதீவு பகுதியில் மாணவி வித்தியா கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் நகர மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் என்பவர் விசாரித்து வருகிறார். மிகவும் கறார் நீதிபதி என்று அறியப்பட்டும் இவர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்துள்ளார்.

வழக்கில் சிக்கிய போலீஸ் டி.ஐ.ஜி,. ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க மாணிக்கவாசகம் இளஞ்செழியன் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் சந்திப்பு வழியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று காரில் சென்றபோது கார் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது காரின் அருகாமையில் வந்த ஒரு மர்ம நபர் நீதிபதியின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ்காரரின் துப்பாக்கியை திடீரென்று உருவி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கி சரமாரியாக சுட்டார்.

அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க நடைபெற்ற போராட்டத்தில் குண்டு காயம் அடைந்த போலீஸ்காரர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்மீது ஏவப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருந்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News