செய்திகள்

இஸ்ரேல் பயணத்தின்போது மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் அனாதையான சிறுவனை சந்திக்கும் மோடி

Published On 2017-06-30 11:14 GMT   |   Update On 2017-06-30 11:14 GMT
இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையான பத்து வயது சிறுவனை சந்திக்கப் போகும் செய்தி அந்நாட்டு ஊடகங்களில் சிறப்பிடத்தை பிடித்துள்ளது.
ஜெருசலேம்:

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தொடர்ந்து மூன்று நாட்கள் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள நாரிமான் ஹவுஸ் என்ற ஐந்து மாடி கட்டித்தின்மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து தொண்டூழியம் செய்யும் நிறுவனத்தின் இணை இயக்குனர் ரப்பி கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகியோரும் உயிரிழந்தனர்.

கைக்குழந்தை மோஷேவுடன் சான்ட்ரா சாமுவேல்ஸ்

அவர்களிடம் தாதியாக பணியாற்றிவந்த இந்தியப் பெண்ணான சான்ட்ரா சாமுவேல்ஸ் அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு வயது ஆண் குழந்தையான மோஷேவை மிக சாமர்த்தியமாக பாதுகாத்து அதன் உயிரை காப்பாற்றினார். தற்போது பத்து வயதாகும் மோஷே தீவிரவாத தாக்குதலில் தனது பெற்றோரை பறிகொடுத்து விட்டு, இஸ்ரேல் நாட்டில் உள்ள தனது தந்தைவழி தாத்தா, பாட்டியிடம் வளர்ந்து வருகிறான்.

தன்னுயிரை பணயம் வைத்து சிறுவன் மோஷேவின் உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ரா சாமுவேலின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு அவரை சிறப்பித்த இஸ்ரேல் அரசு அந்நாட்டின் கவுரவ குடியுரிமையையும் அளித்துள்ளது. தற்போது ஜெருசலேம் நகரில் வேலை செய்துவரும் அவர் வார இறுதி நாட்களில் மோஷேவின் வீட்டுக்கு சென்று அவனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சி அடைகிறார். மோஷேவும் தனது உயிரை காப்பாற்றிய அந்த தாதியின் வருகைக்காக வார இறுதி நாட்களில் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான்.


இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இஸ்ரேல் நாட்டுக்கு வருகிறார். இந்த பயணத்தின்போது, மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த சிறுவன் மோஷேவையும் அவனது உயிரை காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ராவையும் வரும் ஐந்தாம் தேதி சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் மோஷேவின் தாத்தா, பாட்டி மற்றும் சான்ட்ரா சாமுவேல் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரப்பி ஷிமோன் ரோஸென்பெர்க்

இந்த சந்திப்பு தொடர்பாக இஸ்ரேல் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள மோஷேவின் தாத்தா ரப்பி ஷிமோன் ரோஸென்பெர்க், ‘இஸ்ரேலுக்கு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உங்களை சந்திக்க விரும்புகிறார் என இங்குள்ள இந்திய தூதரகத்தில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் மறக்கப்படவில்லை எங்கள் வலிகளை இந்தியர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பதை மட்டும் நான் உணர்ந்தேன்.

இந்திய பிரதமரின் இந்த அருங்குணத்தால் நான் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன். அவரை சந்திக்கும் நாளுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். அவரது பேட்டி அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
Tags:    

Similar News