செய்திகள்

13 கோரிக்கைகளை நிறைவேற்றினால் தடையை விலக்குகிறோம் - கத்தாருக்கு செக் வைக்கும் அரபு நாடுகள்

Published On 2017-06-24 00:12 GMT   |   Update On 2017-06-24 00:12 GMT
கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் அல் ஜஸீரா ஊடகத்தை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தூதரக ரீதியிலான தடையை விலக்குவோம் என சவுதி உள்ளிட்ட 7 நாடுகள் தெரிவித்துள்ளன.
ஜெட்டா:

பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ளன. இவற்றில் அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் செல்வதற்கான அனைத்து வழி போக்குவரத்தையும் மூடிவிட்டன.

குறிப்பாக கத்தார் நாட்டுடனான அனைத்து விமான போக்குவரத்து சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் அந்நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்வதையும் தடை செய்துள்ளன. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைக்க குவைத் மற்றும் துருக்கி முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில், கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் சர்வதேச ஊடகமான அல் ஜஸீராவை இழுத்து மூடுவது, தீவிரவாத அமைப்புகளுடனான உறவை துண்டிப்பது, கத்தாரில் செயல்படும் ஈரான், துருக்கி ராணுவ தளங்களை மூடுவது போன்ற 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்றும் பட்சத்தில் தூதரக ரீதியிலான தடையை விலக்குவது குறித்து பரிசீலிப்பதாக சவுதி, எகிப்து உள்ளிட்ட 7 நாடுகள் தெரிவித்துள்ளன.

13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியல், கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் கத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News