செய்திகள்

ஜல்லிக்கட்டு வெற்றிக்கு மறைமுகமாக உதவிய மார்க் ஜுகர்பர்க்

Published On 2017-01-21 05:50 GMT   |   Update On 2017-01-21 05:50 GMT
தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரும் போராட்டத்துக்கு மார்க் ஜுகர்பர்க் மறைமுகமாக உதவி செய்துள்ளதை தமிழர்களாகிய நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
நியூயார்க்:

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரும் போராட்டத்துக்கு மார்க் ஜுகர்பர்க் மறைமுகமாக உதவி செய்துள்ளதை தமிழர்களாகிய நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

தடைசெய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளைஞர்களுடன் தொடங்கிய அறவழிப் போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் விசுவரூபம் எடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் தாய்மார்கள், முதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

இதேபோல், மும்பை, டெல்லி, குஜராத் என நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவடைந்த இந்த போராட்டம் தற்போது கடல் கடந்து உலகின் பிறநாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி, பெருந்திரளாக போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

கடந்த 16-ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் சிறுபொறியாக தொடங்கிய போராட்டம் தற்போது உலக ஊடகங்களின் கேமராக்களை தமிழ்நாட்டை நோக்கி திரும்ப வைத்துள்ளது.

இந்த எழுச்சிமிகு போராட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்பை யாராலும், மறுக்கவோ மறக்கவோ முடியாது.

குறிப்பாக, பிரதமரின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒருகட்டமாக புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை நீக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடங்கியவுடன் மக்கள் தங்களது ஆதங்கத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்யும் உணர்வு வடிகாலாக ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் புத்துயிர் பெற்றன.

இதையடுத்து, மத்திய அரசின் பொது விடுமுறை பட்டியலில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை இடம்பெறவில்லை என பரவிய செய்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி, தமிழர்களுக்குள் உறங்கி கொண்டிருந்த இன உணர்வு என்ற பெருந்தீயை கிளர்ந்தெழச் செய்தது.

அப்போதே, மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண துணிந்த தமிழக இளைஞர்களின் அடுத்தகட்ட பார்வையும் நோக்கமும், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை புத்தாக்கம் செய்யும் வகையில் திசைதிரும்பியது.

ஆரம்பத்தில், சிறுசிறு குழுக்களாக இயங்கிவந்த ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கத்தினர் அனைவரும், ‘ஹிப் ஹாப் தமிழா!’ ஆதி வெளியிட்ட ஜல்லிக்கட்டு தொடர்பான வீடியோவுக்கு பின்னர் ஒருங்கிணைய தொடங்கினர்.

பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் விஸ்வரூப சக்தியாக எழுச்சிபெற்ற இந்த குழுவினர் பதிவிட்ட தகவல்கள் அனைத்தும் உலகின் மூலை முடுக்கில் வாழ்ந்துவரும் தமிழ் சொந்தங்கள் அனைவரையும் உடனுக்குடன் சென்றடைந்தன.

குறிப்பாக, கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமும், போராட்டக் களத்தில் இருந்த சிலரை போலீசார் கைது செய்த செய்தியும் பரபரப்பாக பரவியதன் விளைவாக, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ம் தேதி சிலநூறு மாணவர்களால் தொடங்கப்பட்ட அறவழி போராட்டம், இன்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும் அவசர சட்டமாக உருமாறி உள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னணியில் உள்ள பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களின் உரிமையாளரான மார்க் ஜுகர்பர்க், தனது இணையச்சேவையின் துணையாக நின்றுள்ளதை தமிழர்களாகிய நாம் அனைவரும் நன்றியறிதலுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்!

Similar News