செய்திகள்

நேபாளத்தில் யானை தாக்கியதில் இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

Published On 2017-01-10 16:06 GMT   |   Update On 2017-01-10 16:06 GMT
நேபாளத்தில் தேசிய வனவிலங்கு பூங்காவில் காட்டு யானை தாக்கியதில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
காத்மாண்டு:

நேபாள நாட்டில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் சித்வான் தேசிய வனவிலங்குகள் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த சினேகா கான்பரா என்ற 22 வயது பெண் தனது குடும்பத்தினருடன் இன்று சித்வான் பூங்காவுக்கு சுற்றலா சென்றனர். அப்போது யானைகள் உள்ள பகுதிக்கு சென்றபோது காட்டு யானை ஒன்று அவர்களை துரத்தியது.

குடும்பத்தினர் அனைவரும் தப்பி ஓட, சினேகா கான்பரா மட்டும் யானையிடம் சிக்கிக்கொண்டார். யானை அவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய கான்பராவை பாரத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இனப்பெருக்கத்திற்காக காட்டு யானைகள் சித்வான் தேசிய பூங்காவில் உள்ள இனப்பெருக்க மையத்திற்கு கொண்டு வரப்படுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு கொண்டு வரப்பட்ட யானைகளில் ஒன்று மிரண்டு சுற்றுலாப் பயணியை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News