தமிழ்நாடு

அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மீண்டும் புகார்

Published On 2022-07-14 04:09 GMT   |   Update On 2022-07-14 04:09 GMT
  • தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
  • தற்போது 2-வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி அந்த கட்சியின் பொதுக்குழு கூடி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. அது மட்டுமின்றி கட்சியின் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதன்படி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்த ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணிக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இருதரப்பிலும் மாறி மாறி தேர்தல் ஆணையம், கோர்ட்டு, சட்டசபை, போலீஸ் மற்றும் வங்கிகளுக்கு கடிதங்களும், மனுக்களும் அனுப்பியபடி உள்ளனர்.

கட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் இரு தரப்பிலும் பலமுனைகளில் பலப்பரீட்சை நடந்து வருகிறது. ஆனால் இரு தரப்பினருக்கும் உடனடியாக தீர்வு கிடைக்குமா? என்பதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நீடித்தபடி உள்ளது.

இதற்கிடையே அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமிக்கலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் ஆர்.விஸ்வநாதன் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்படுகிறார்கள். முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சி.வி.சண்முகம், பி.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பால கங்கா ஆகியோர் அ.தி.மு.க. அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். இந்த நியமனத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகள் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளாக சிலரது பெயரை அறிவித்துள்ளார். இது சட்ட விரோதமான அறிவிப்பு ஆகும். கட்சி விதிகளுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் போது உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. எனவே புதிய நிர்வாகிகளை நியமிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அவரது அறிவிப்பு கட்சி விதிகளின்படி செல்லாது. எனவே தலைமை தேர்தல் ஆணையர் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதை நிராகரிக்க வேண்டும்.

11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவும் சட்ட விரோதமானது. அதை அடிப்படையாக கொண்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதும் சட்ட நடைமுறைக்கு எதிரானதாகும். இதை தலைமை தேர்தல் ஆணையர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது 2-வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டம் ஒப்புதல் பெற்று நடைபெற்றதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும் 2,200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து பெற்று நடந்த பொதுக்குழுவில் கட்சியின் உரிய விதிப்படி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதற்கான மனுவையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழங்கி உள்ளனர். இரு தரப்பினரின் மனுக்களையும் தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்ட பிறகுதான் இதில் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கும். குறிப்பாக இரு தரப்பினரையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தும். அதன் பிறகே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கும்.

இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர கால அவகாசம் தேவைப்படும். எனவே அதுவரை அ.தி.மு.க. வில் சட்ட ரீதியிலான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டேதான் இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Tags:    

Similar News