தமிழ்நாடு

தண்ணீரில் சிக்கி உள்ள என் கணவரை காப்பாற்றுங்கள்... கதறும் புளியங்குளம் பெண்

Published On 2023-12-19 09:44 GMT   |   Update On 2023-12-19 09:45 GMT
  • அங்கு போங்கள்... இங்கு போங்கள் என்றுதான் அலைக்கழிக்கிறார்கள். எனக்கு உதவி செய்ய யாருமில்லை.
  • ஆபத்தில் தவிப்பவர்களை அலைக்கழிக்க வைக்கலாமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை தவிக்க விட்டுள்ளது.

உதவிகள் தேவைப்படுபவர்கள் வாட்ஸ்அப், வலைத்தளம் மூலமாகவும் உதவிகள் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புளியங்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவரை காப்பாற்றும்படி கதறி அழுது வருவது வைரலாகி உள்ளது.

கண்ணீர் மல்க அந்த பெண் கூறியதாவது:-

எனது கணவர் அவரது நண்பர் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்றார். அப்போது காரை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. கார் மீது ஏறி நின்றபடி என்னுடன் பேசினார். மாலை வரை தொடர்பில் இருந்தார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.

யாரும் உதவிக்கு வரவில்லை. கடவுளே... என் கணவரை யாராவது காப்பாற்றி கொடுங்களேன். ஒவ்வொரு அலுவலகமாக சென்று உதவி கேட்டேன். அங்கு போங்கள்... இங்கு போங்கள் என்றுதான் அலைக்கழிக்கிறார்கள். எனக்கு உதவி செய்ய யாருமில்லை.

எனக்கு யாருமில்லை. எப்படியாவது என் கணவரை காப்பாற்றி கொடுங்கள் என்று அந்த பெண் கண்ணீர் விட்டு கதறுவது கல் நெஞ்சையும் கரைய வைக்கிறது.

இயற்கை பேரிடர்களும், பேரழிவுகளும் யாருக்கு எப்போது வரும் என்று தெரியாத நெருக்கடியான சூழலில் வாழ்கிறோம்.

உதவி செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் உதவி கேட்டு செல்பவர்களிடம் இது எங்கள் சம்பந்தப்பட்டது அல்ல என்று சொல்ல எப்படி மனம் வருகிறது? எல்லோரும் அரசு ஊழியர்கள்தான்.

இந்த மக்கள் பணத்தில் வாழ்பவர்கள் தான் என்பதை உணர வேண்டும். எந்த துறையை, யாரை தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களை நீங்களே தொடர்பு கொண்டு உதவி செய்யலாமே. ஆபத்தில் தவிப்பவர்களை அலைக்கழிக்க வைக்கலாமா?

Tags:    

Similar News