தமிழ்நாடு

வேங்கைவயல்- கால அவகாசம் கேட்டு 10வது முறையாக கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. மனு

Published On 2024-05-21 10:10 GMT   |   Update On 2024-05-21 10:10 GMT
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 492 நாட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி அந்தப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தமிழக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

10 நாட்கள் மட்டுமே போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி 16-ந்தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று 512 நாட்கள் ஆன நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் 492 நாட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். குரல் மாதிரி பதிவு, மரபணு சோதனை என பல்வேறு கட்டங்களாக நீதி மன்றம் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. 512 நாட்கள் விசாரணை நடைபெற்றாலும் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 9 முறை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

தற்போது 10வது முறையாக இன்று ஒரு மாதததிற்கு கால அவகாசம் கேட்டு மனு செய்துள்ளது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. வட்டாரம் கூறும்போது:-

இது கடைசியாக கேட்கும் கால அவகாசமாக இருக்கும். குற்றவாளியை நெருங்கி விட்டோம். இந்த ஒரு மாத காலத்தில் குற்றவாளியை உறுதி செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் என்று கூறினர்.

Tags:    

Similar News