தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்துவதா?- மோடியின் வீடியோவை வெளியிட்டு ஸ்டாலின் கண்டனம்
- தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி
- திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஜெகந்நாதர் ஆலயக் கருவூலம் தொடர்பாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்து ஒட்டுமொத்த ஒடிசா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதென மக்கள் கூறுகின்றனர்.இதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டுபோனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?" என்று மோடி பேசியுள்ளார்.