தமிழ்நாடு

வைத்திலிங்கம்

தேவைப்படும்போது பொதுக்குழு கூட்டப்படும்- ஓ.பி.எஸ். அணி வைத்திலிங்கம் சொல்கிறார்

Published On 2022-08-16 08:15 GMT   |   Update On 2022-08-16 11:16 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.
  • எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசித்தார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். ஓ.பி.எஸ். சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினார்கள்.

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், திருச்சி ரத்தினவேல் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

நேற்று மட்டும் சுமார் 500 பேர் வரை ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசித்தார்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறும்போது, 'பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அது கூட்டப்படும்போது முறைப்படி தகவலை தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சட்ட போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தான் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை மொத்தமாக சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News