தமிழ்நாடு

அரசியல் மாற்றங்களுக்கு கருவியாக திகழ்ந்தவர் விஜயகாந்த்

Published On 2023-12-28 09:33 GMT   |   Update On 2023-12-28 09:33 GMT
  • விஜயகாந்த் ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர்.
  • மக்கள் நலத்திட்டங்களை ஆண்டுதோறும் கட்சியின் சார்பாக சிறப்புடன் தொடர்ந்து செய்து வந்தவர் விஜயகாந்த்.

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக அவர் திகழ்ந்தார். அதேபோல, அரசியலில் கால் பதித்து புதிய பாதையில் பயணித்து தனக்கென தனி வாக்கு வங்கியை திரட்டி, அதன்மூலம் பல அரசியல் மாற்றங்களுக்கு கருவியாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர். மக்கள் நலத்திட்டங்களை ஆண்டுதோறும் கட்சியின் சார்பாக சிறப்புடன் தொடர்ந்து செய்து வந்தவர்.

விஜயகாந்த் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், தே.மு.தி.க. கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News