தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்- திருமாவளவன் எம்.பி. பேட்டி

Published On 2023-03-02 08:09 GMT   |   Update On 2023-03-02 08:59 GMT
  • காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான்.
  • அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது.

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க.வை வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார்.

மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாகவும் பேசி உள்ளார்.

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதலமைச்சர் ஈடுபடவேண்டும். நாடு முழுவதும் சுற்றுப்பயணமாக சென்று மாநில அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். தி.மு.க. அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடிரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்துவிட்டார்.

காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்ரேட்டுகளுக்கு ஆனது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. இந்திய ஒன்றிய அரசு சமையல் விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News