தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம் அவசர சட்டம் செயல்பாட்டுக்கு வராததற்கு தி.மு.க.வே காரணம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2022-12-02 05:17 GMT   |   Update On 2022-12-02 05:17 GMT
  • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டு உள்ளார்.
  • ஆளும் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தாமல் 8 உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.

சென்னை:

தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் அந்த சட்டமும் காலாவதியாகி விட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்காததால் தான் சட்டமே நடைமுறைக்கு வராமல் போனது என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். மேலும் எல்லா தவறுகளையும் செய்து விட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது என்றும் விமர்சித்தார்.

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

இதுபற்றி அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டு உள்ளார்.

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன்? என்று ஏற்கனவே கேட்டிருந்தேன். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களை பரப்பி கவர்னரின் மேல் பழியை போட்டு வந்த தி.மு.க.வினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தாமல் 8 உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News