தமிழ்நாடு
அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா- வீட்டு தனிமையில் சிகிச்சை

Published On 2022-01-21 06:55 GMT   |   Update On 2022-01-21 06:55 GMT
ஜல்லிக்கட்டு போட்டி கூட்டத்தில் சென்று வந்ததால் அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மதுரை:

தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருப்பவர் மூர்த்தி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. சளி, இருமல், காய்ச்சலால் அவர் அவதிப்பட்டார்.

இதையடுத்து அமைச்சர் மூர்த்தி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மூர்த்தி தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தனது வீட்டிலேயே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதால் அவரது குடும்பத்தினர், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை சுகாதாரத் துறையினர் சேகரித்தனர். பின்பு அவர்களிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் மூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் அந்த போட்டிகளில் தொடக்கம் முதல் இறுதி வரை முன் நின்று நடத்தி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி கூட்டத்தில் சென்று வந்ததால் அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News