தமிழ்நாடு

வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு அறை: கண்களை மூடாமல் காவல் காக்கும் தொண்டர்கள்

Published On 2024-05-10 07:21 GMT   |   Update On 2024-05-10 07:21 GMT
  • கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
  • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்கள் தொண்டர்களையும் பாதுகாப்புக்கு அனுப்பி உள்ளனர். சுமார் 10 முதல் 20 பேர் தினமும் சுழற்சி முறையில் விடிய விடிய காவல் இருக்கிறார்கள்.

எந்த நேரத்தில் கேமராக்கள் பழுது பட்டாலும் உடனடியாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தங்கள் கட்சி தலைமைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிக் கிறார்கள்.

ஒரே கொட்டகையில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து இருப்பதால் ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து பேசி கொள்கிறார்கள். உணவுகளையும் பரிமாறி கொள்கிறார்கள்.

இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். இது தவிர மூன்று வேளையும் உணவும், நொறுக்கு தீனிகளும் வழங்கப்படுகிறது.

இந்த பணிகள் ஓட்டு எண்ணும் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை தொடரும் என்று கூறினார்கள்.

Tags:    

Similar News