செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் புதிதாக அனல் மின் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

Published On 2021-10-28 09:41 GMT   |   Update On 2021-10-28 09:41 GMT
நிலக்கரி அனல்மின் நிலையங்கள் அனைத்திலும் உடனடியாக நச்சுவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுற்றுச்சூழல் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது; அதனால், அங்குள்ள மக்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். அதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் சார்பில் மட்டும் 7,500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த பத்தாண்டுகளில் 17,970 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக தமிழக அரசின் சார்பில் இப்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் திட்டங்கள் தவிர, புதிதாக எந்த அனல் மின் திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக ஒரே இடத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலப்பின மின்னுற்பத்தி முறைக்கு தமிழக அரசு மாற வேண்டும். நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களை எரிவாயு அடிப்படையிலான அனல் மின்நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் முன்னதாக நிலக்கரி அனல்மின் நிலையங்கள் அனைத்திலும் உடனடியாக நச்சுவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News