செய்திகள்
ராமதாஸ்

7 தமிழர் விடுதலைக்கு புதிய பரிந்துரையை கவர்னருக்கு அனுப்ப வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-08-06 09:45 GMT   |   Update On 2021-08-06 09:45 GMT
7 தமிழர் விடுதலைக்காக கவர்னரை மீண்டும் வலியுறுத்துவதே சாதகமான தீர்வாகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்யாவிட்டாலும், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி அவர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான சிக்கலில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

அரியானாவைச் சேர்ந்த வாழ்நாள் சிறைத் தண்டனை கைதி ஒருவரை, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது கவர்னர் எப்போது முடிவெடுப்பார்? என்பது எவருக்குமே விடை தெரியாத வினா ஆகும். அதனால் 7 தமிழர் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. அது 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தும்.

கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய ஆளுனருக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ள நிலையில், 7 தமிழர் விடுதலைக்காக கவர்னரை மீண்டும் வலியுறுத்துவதே சாதகமான தீர்வாகும்.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி 7 தமிழர்களை விடுதலை செய்யும்படி பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News