செய்திகள்
கருமந்துறை விவசாய தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.

விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்- தொல்லியல் துறையினர் ஆய்வு

Published On 2021-07-28 08:10 GMT   |   Update On 2021-07-28 08:10 GMT
பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 10 அடி தூரத்திற்கு தற்காலிக வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு நாடு ஊராட்சி கிளாக்காடு பிரிவு சாலையை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விவசாயியான இவர் நேற்று தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரால் உழுதபோது திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். 1.5 அடி அகலத்தில் 10 அடி ஆழத்திற்கும் மேலாக அந்த குழி நீண்டு சென்றதால் உடனே அவர் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஆத்தூர் ஆர்.டி.ஓ. சரண்யா தலைமையில் வருவாய் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 10 அடி தூரத்திற்கு தற்காலிக வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பள்ளத்தை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தானிய கிடங்கு போன்று காணப்படுகிறது. முதுமக்கள் தாழி அல்லது பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் போல உள்ளது. இதனால் வருவாய்த்துறையினர், தொல்லியல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். திருச்சியில் இருந்து தொல்லியல் ஆய்வு குழுவினர் இன்று பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் ஆய்வு செய்த பின்னர் தான் திடீர் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News