செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சி வந்த மேலும் ஒரு பயணிக்கு கொரோனா தொற்று

Published On 2021-02-16 04:35 GMT   |   Update On 2021-02-16 04:35 GMT
கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:

கொரோனா தாக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் கோலாலம்பூர், துபாய், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த விமானங்களில் பயணம் செய்வதற்கு கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் கடந்த 3-ந்தேதி கோலாலம்பூரிலிருந்து வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்ட சான்றிதழுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்து வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனோ தொற்று இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு கொரோனா தொற்று உள்ள பயணிகளை அழைத்து வரக்கூடாது என கண்டித்து கடிதம் அனுப்பினர்.

அதேபோன்று கடந்த 7-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கொரோனா தொற்று உள்ள மதுரை பெண் பயணியை அழைத்து வந்தது தெரிந்ததும் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து தனிமைப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு விமான நிலைய அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பயணிகள் மருத்துவ குழுவினரின் சோதனைக்கு வந்தபோது அதில் வந்த மதுரை பயணி ஒருவருக்கு கொரோனா நோய் உள்ளது என சான்று அளிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக அந்த பயணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தினர். மேலும் அந்த பயணி பயன்படுத்திய இடங்களில் உடனடியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணியை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் மேலும் கொரோனா நோய் பரவும் வகையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகளை மத்திய அரசின் ஆணையை மீறி அழைத்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News