செய்திகள்
உலகிலேயே அதிக உயரம் பறக்கக்கூடிய மங்கோலியா நாட்டின் வரித்தலை வாத்து.

தாமிரபரணி நீர் நிலைகளில் 26,868 பறவைகள் வசிப்பு

Published On 2021-02-13 04:23 GMT   |   Update On 2021-02-13 04:23 GMT
தாமிரபரணி நீர் நிலைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்தம் 73 சிற்றினங்களை சேர்ந்த 26,868 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு மூலம் நீர்வரத்து உள்ள குளங்களில் ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம்.

இந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணியை மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள பாதுகாப்பு மையம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தியது.

இதற்காக 3 மாவட்டங்களிலும் உள்ள 62 குளங்களில் சுமார் 120 தன்னார்வர்கள் 7 குழுக்களாக பிரிந்து பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 4,371 சின்ன சீழ்கை சிறவி, 4,237 மஞ்சள் கொக்கு, 1,398 வலசை பறவைகளான மீசை ஆலா, 1,343 நாமத்தலை வாத்து, 1,223 வெண் புருவ வாத்து, 1,019 ஊசிவால் வாத்து உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர் குளத்தில் 30 சிற்றினங்களை சேர்ந்த 3,578 பறவைகளும், ஆறுமுகமங்கலம் குளத்தில் 27 சிற்றினங்களை சேர்ந்த 1,130 பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம் சுரண்டை குளத்தில் 2,566 பறவைகள், சுந்தரபாண்டியபுரம் குளத்தில் 1,250 பறவைகளும், வாகைகுளத்தில் 1,193 பறவைகளும், நெல்லை மாவட்டம் மானூர் குளத்தில் 1,627 பறவைகளும் கண்டறியப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறுகையில், கங்கை கொண்டான் குளத்தில் நத்தைகுத்தி நாரை, பாம்பு தாரா, நீர் காகம், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டது. நெல்லை நயினார்குளத்தில் உள்ள மரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்பு தாரா காணப்பட்டது.



முக்கூடல் அருகே உள்ள செங்குளம், தாழையூத்து அருகே உள்ள கல்குறிச்சி குளங்களில் கருவால் மூக்கன் பறவை காணப்பட்டன. இந்த பறவை அழிந்து வரும் இனத்தை சேர்ந்தது.

இது தவிர சிவந்திபட்டி கிராமம் வேப்பன்குளத்தில் மங்கோலியா நாட்டில் இருந்து வலசை வரும் வரித்தலை வாத்துகளும் அதிகமாக காணப்பட்டது. இவை உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கக்கூடிய தன்மை கொண்டவை ஆகும்.

இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு காரணமாக அனைத்து குளங்களிலும் ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்திருந்தன.

நெல்லை வேய்ந்தான் குளத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பறவைகளே வலசை வந்திருந்தன. இதற்கு காரணம் அந்த குளம் பராமரிப்பு இன்றி காணப்படுவது தான்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்தம் 73 சிற்றினங்களை சேர்ந்த 26,868 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன என்றார்.
Tags:    

Similar News