செய்திகள்
திருநாவுக்கரசர்

நிர்வாகிகள் நியமன விவகாரம்: திருநாவுக்கரசர் எம்.பி. ‘திடீர்’ போர்க்கொடி

Published On 2020-12-20 08:46 GMT   |   Update On 2020-12-20 08:46 GMT
புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி விவகாரத்தில் திருநாவுக்கரசர் எம்.பி., போர்க்கொடி தூக்கி இருப்பது காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:

தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசை பொறுத்த வரை எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் தொகுதி பங்கீடு முதல் நிர்வாகிகள் நியமனம் வரை எதுவாக இருந்தாலும் கோட்டா முறையில் தலைவர்களுக்கு வழங்கப்படுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் தலைவர்களை திருப்திபடுத்த முடியவில்லை.

ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி., தங்கபாலு ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது முன்கூட்டியே வந்தபிறகும் தலைவர்கள் இருக்கையில் திருநாவுக்கரசரை அமர வைக்கவில்லை. இதற்கும் காங்கிரசுக்குள் புகைந்து கொண்டிருக்கும் கோஷ்டி பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த திருநாவுக்கரசர் பாதியிலேயே புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் வீட்டில் முக்கிய நிர்வாகிகள் பலர் அவரை சந்தித்தனர். அவரது ஆதரவாளர்களும் சென்றனர். எம்.பி., எம்.எல். ஏ.,க்களும் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு நிகழ்ச்சி பிற்பகல் வரை நீடித்தது.

அப்போது புதிய நிர்வாகிகள் நியமனத்தில் மற்ற தலைவர்களை போல் தனது ஆதரவாளர்களுக்கும் சம அளவு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் வருகிற தேர்தலில் தி.மு.க.விடம் பேசி கடந்த தேர்தலைவிட குறையாத அளவில் தொகுதிகளை வாங்க வேண்டும் என்றும், கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ராகுலை சந்தித்து புகார் தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக திருநாவுக்கரசரை சந்தித்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி விவகாரத்தில் திருநாவுக்கரசர் போர்க்கொடி தூக்கி இருப்பது காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News