செய்திகள்
சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல் ஒழுங்கீனமானது- அமைச்சர் சி.வி.சண்முகம்

Published On 2020-10-16 01:43 GMT   |   Update On 2020-10-16 01:43 GMT
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்:

விழுப்புரத்தில் அரசு விழாவில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை சிறப்பு அந்தஸ்து பெற வேண்டி அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் மூலம் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது நிலுவையில் உள்ள நிலையில் இதைப்பற்றி சட்டமன்றத்திலும் நாங்கள் தெளிவுப்படுத்தி உள்ளோம்.

எந்த நிலையிலும், எந்தவொரு சூழலிலும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய எந்தவித செயலையும் அரசு ஏற்காது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று கூறியுள்ளோம். சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள சில ஷரத்துகள், முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க கோரியபோது அவர்கள் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர். ஆகவே இது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதை நாங்கள் தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

இந்த சூழலில் இப்போது துணைவேந்தராக இருக்கும் கர்நாடகாவில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா என்பவர், தனக்கு மேல் வேந்தர் இருக்கிறார், இணைவேந்தர் இருக்கிறார், அதற்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது, இதையெல்லாம் மீறி அவர் மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார். நாங்களே நிதி ஆதாரம் திரட்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த வகையில் நிதி ஆதாரத்தை பெருக்கிக்கொள்வார் என்று தெரியவில்லை. துணைவேந்தரின் இந்த செயல் ஒழுங்கீனமானது. அவருடைய இந்த ஒழுங்கீன நடவடிக்கைக்கு தமிழக அரசு அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Tags:    

Similar News