செய்திகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் புலவச்சாறு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

Published On 2020-10-01 08:53 GMT   |   Update On 2020-10-01 08:53 GMT
கொடைக்கானல் அருகே புலவச்சாறு அருவியில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் இதனை புதிய சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர் வீழ்ச்சி, கரடிச்சோலை உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இது தவிர பல்வேறு இடங்களில் புதிய நீர் வீழ்ச்சிகளும் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பூங்காக்கள் மற்றும் கோக்கர்ஸ்வாக் பகுதி மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிடும் இடமாக உள்ளது. இன்று முதல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழக அரசின் ஊரடங்கு அறிவிப்பால் வருகிற 31-ந் தேதி வரை மேலும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல்மலைக்கிராமங்களில் ஒன்றானது போளூர் கிராமம். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் மிகவும் அழகான அருவி அமைந்துள்ளது. இப்பகுதி புலவச்சாறு எனப் பெயர் பெற்றுள்ளதால் புலவச்சாறு அருவி என அழைக்கப்படுகிறது.

அதிகமாக இங்கு சினிமா படப்பிடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அத்தி பூத்தது போல் எப்போதாவது சுற்றுலா பயணிகள் வரும் இப்பகுதியில் தற்போது அடிக்கடி சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் அருவி அமைந்துள்ள இப்பகுதி உயிருக்கு பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. எனவே முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கவும், புதிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த இடத்தை சேர்த்து சுற்றுலாவை விரிவுபடுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News