செய்திகள்
ரெயில்

கோவையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் 13 நாட்களில் 58,500 பேர் பயணம்

Published On 2020-09-20 07:51 GMT   |   Update On 2020-09-20 08:12 GMT
கடந்த 7-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை 13 நாட்களில் 58,500 ஆயிரம் பேர் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு ரெயில்களில் சென்று உள்ளனர்.
கோவை:

கொரோனா தளர்வு காரணமாக கடந்த 7-ந்தேதி முதல் கோவையில் இருந்து சென்னைக்கு 4 சிறப்பு ரெயில்களும், மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மதியம் 2.05 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் மாலை 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்கிறது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்கிறது. பின்னர் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு வந்து சேர்கிறது.

சேரன் எக்ஸ்பிரஸ் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்கிறது. பின்னர் இரவு 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு கோவைக்கு வந்து சேருகிறது.

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவைக்கு வந்து சேருகிறது. பின்னர் 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.50 மணிக்கு சென்னைக்கு செல்கிறது. பின்னர் இரவு 8.55 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு கோவைக்கு வந்து சேருகிறது. பின்னர் காலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 6.10 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேருகிறது.

இந்த ரெயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, வாலாஜா ரோடு, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேருகிறது. பின்னர் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கோவை வந்து சேருகிறது. இந்த ரெயில் இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் 1 மணி நேரத்துக்கு முன்பு ரெயில் நிலையத்துக்கு வர வேண்டும். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சிறப்பு ரெயில்களில் ஆரம்ப கால கட்டத்தில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த சிறப்பு ரெயிகளில் தினசரி 4,700 பேர் வரை சென்று வருகின்றனர். கடந்த 7-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை 13 நாட்களில் 58,500 ஆயிரம் பேர் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு ரெயில்களில் சென்று உள்ளனர்.
Tags:    

Similar News