செய்திகள்
கேஎஸ் அழகிரி

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்- கேஎஸ் அழகிரி கோரிக்கை

Published On 2020-09-07 08:16 GMT   |   Update On 2020-09-07 08:16 GMT
10 ஆண்டுகளாக வேலை பார்க்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வி உரிமை சட்டம் மூலமாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்த சர்வ சிக்சா அபியான் திட்டத்தின்கீழ், தமிழகஅரசுப் பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர்களை 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்து, தற்போது 7700 ரூபாய் தொகுப்பூதியத்தோடு 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர்.

சர்வ சிக்சா அபியான் என்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த கல்வியாக செயல்பட்டுவருகிறது. இதில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது மனித நேயமற்ற நடவடிக்கையாகும்.

கடந்த 10 ஆண்டுகளில், அரசு வேலையை நம்பி வந்த 16,549 பகுதிநேர ஆசிரியர்களில், மரணம், 58 வயதாகி பணி ஓய்வு போக, தற்போது மீதமுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர். ரூ.5000 சம்பளத்தில் பணி அமர்த்தப்பட்ட அவர்களுக்கு சம்பள உயர்வு முதல் முறையாக 2014ம் ஆண்டு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. கடைசியாக 2017ம் ஆண்டு 700 ரூபாய் உயர்த்தி தரப்பட்டது. 10 ஆண்டுகளில் 2 முறை சம்பள உயர்வோடு, இந்த குறைந்த சம்பளமான 7700 ரூபாயை வைத்துக்கொண்டு, வி‌ஷம்போல ஏறிவரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் வறுமையால் வாடுகிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு செய்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இதுநாள்வரை நடைமுறைப்படுத்தவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வுகாண தமிழக அரசு முயலவேண்டும்.

எனவே, மனிதாபிமான உணர்வோடு கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக ரூ. 7700 சம்பளத்தில் பணியாற்றிவரும் 12 ஆயிரம் பேரை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News