செய்திகள்
ஆக்கிரமிப்புகளைஅகற்றக்கோரி எறையசமுத்திரம் கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2020-07-21 07:05 GMT   |   Update On 2020-07-21 07:05 GMT
கல்பாடி வரத்து வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு செல்கின்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலக பெட்டியில் கோரிக்கை மனுக்கள் போட பொதுமக்கள் பலர் வந்தனர். அப்போது எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கல்பாடி கிராமத்தில் உள்ள மருதையாற்றுக்கு மழைநீர் செல்லும் வரத்து வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கல்பாடி கிராமத்தில் மருதையாற்றுக்கு மழைநீர் செல்லும் அரசுக்கு சொந்தமான வரத்து வாய்க்கால் உள்ளது. அந்த வரத்து வாய்க்கால் வழியாக மழைநீர் முரியம்பழ ஓடைக்கு சென்று மருதையாற்றுக்கு சென்றடையும்.

மேலும் அந்த வரத்து வாய்க்காலை, அதனருகே உள்ள நிலங்களுக்கு நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருவதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி தனிநபர் ஒருவர் அடியாட்களை வைத்து கொண்டு சட்ட விரோதமாக வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளார். இதனால் வரத்து வாய்க்காலில் மழைநீர் செல்வதற்கும், விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு சமூகத்தினரிடையே சாதி மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரத்து வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு மருவத்தூர் போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உடந்தையாக இருந்து வருகிறார். இது தொடர்பாக நாங்கள் பெரம்பலூர் தாசில்தாரிடம் முறையிட்டதன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி ஆக்கிரமிப்பு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். எனவே வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி, ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மற்றும் அவரின் அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த வரத்து வாய்க்காலை அளந்து கல் நடவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்ட மனுவில், அரசு திட்டத்தில் கோழி பண்ணை அமைத்து கடன் சுமையில் தவித்து கொண்டு இருக்கும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு விலையில்லா ஆடுகளை அரசு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Tags:    

Similar News