செய்திகள்
குருந்தன்கோடு யூனியன் அலுவலக வளாகத்தில் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டதை படத்தில் காணலாம்.

பெண் அலுவலருக்கு கொரோனா - குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் மூடப்பட்டது

Published On 2020-07-09 13:38 GMT   |   Update On 2020-07-09 13:38 GMT
குருந்தன்கோடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் மூடப்பட்டது.
வில்லுக்குறி:

குருந்தன்கோடு யூனியன் அலுவலகத்தில் ராஜாக்கமங்கலம் அருகே பூச்சிக்காடு பகுதியை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது காய்ச்சால் அவதிப்பட்டார். அவரை சக பணியாளர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். மேலும், பெண் அலுவலரின் கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களது 2 குழந்தைகளும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டன. பெண் அலுவலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு திருமண வீட்டில் இருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. சுகாதார பணியாளர்கள் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அலுவலக வளாக முழுவதும் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

முளகுமூடு பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவு நேற்று வந்தது. இதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அவர்களின் வீடு மட்டும் தெரு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையில் பணிபுரியும் கொடுப்பைக்குழியை சேர்ந்த 21 வயது தொழிலாளி ஒருவருக்கு 3 நாட்களுக்கு முன்பு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து நடந்த பரிசோதனையில் மேலும் 4 தொழிலாளிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மணல் ஆலையில் பணி புரியும் மண்டைக்காடை சேர்ந்த 43 வயது தொழிலாளி மற்றும் அவருடைய மனைவி, பிள்ளை ஆகியோருக்கும் நேற்று தொற்று உறுதியானது. இவருக்கு வெளி தொடர்பில் இருந்து தொற்று பரவியதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். இதே போல் காரியாவிளையை சேர்ந்த 50 வயது நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News