செய்திகள்
செவிலியர் வளர்மதி - கல்லூரி மாணவி கியூபா

ஊரடங்கு இன்றுடன் 100வது நாளை எட்டுகிறது- பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

Published On 2020-07-02 10:40 GMT   |   Update On 2020-07-02 10:40 GMT
ஊரடங்கு இன்றுடன் 100-வது நாளை எட்டுகிறது. இந்த ஊரடங்கில் தாங்கள் சந்தித்த சிரமம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பலத்த சிரமத்துக்கு இடையே இன்று(வியாழக்கிழமை) 100 நாளை எட்டுகிறது. இந்த 100 நாட்கள் வலிகள் நிறைந்த ஏராளமான விஷயங்களை ஊரடங்கு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அதாவது கைகள் சுத்தமாக இருக்கின்றன. ஆனால் ஒருவருக்கொருவர் ஆசையுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாற முடியவில்லை.

பாசம் இருக்கிறது. ஆனால் ஒருவருக்கொருவர் கட்டி தழுவ முடிவதில்லை. திருமணத்தை உற்றார், ஊறவினர்களை அழைத்து ஜாம், ஜாம் என்று நடத்தவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் 50 பேரை மட்டுமே அழைக்க முடிகிறது. சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் வட்டத்துக்குள் நிற்க வேண்டியது இருக்கிறது.

காற்று சுத்தமாக இருக்கிறது. ஆனால் முககவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. ஆனால் அதிக தூரம் பயணம் செய்ய முடியவில்லை. நண்பர்களிடம் நேரம் இருக்கிறது. ஆனால் ஒரே அறையில் சேர்ந்து நேரத்தை செலவிடமுடியவில்லை. ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் ரெயில்கள் தான் வருவது இல்லை.

நடந்து செல்பவர்களுக்கு, தங்கள் வாகனங்களில் ‘லிப்ட்‘ கொடுக்க வேண்டும் என்று மனிதாபிமானம் இருக்கிறது. ஆனால் அவருக்கு நோய் தொற்று இருந்து, நமக்கு நோய் வந்துவிடுமோ என்ற பயம் இருப்பதால் மனிதாபிமானம் தோற்றுப்போய் விட்டது.

ஏ.சி. இருக்கிறது. வெயில் நேரத்தில் அதனை இயக்கத்தான் முடியவில்லை. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொருவரையும் எதிர்பார்க்க வைத்தது. அலுவலக பணி, பள்ளி, கல்லூரி செல்லும் சில மாணவர்களுக்கு திங்கட்கிழமை சுமையாக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நாட்களும் நகர மறுக்கின்றன. இதுதான் பலருடைய எண்ண ஓட்டமாக இருக்கிறது. பணம் இருப்பவர்கள் செலவு செய்ய முடியாமலும், பணம் இல்லாதவர்கள் அதை சம்பாதிக்க வழி இல்லாமலும் இருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட இப்போது சிலருக்கு விரோதிகளாக மாறிவிட்டார்கள். நம்மோடு வாழ்ந்து விட்டு மரணம் அடைந்தவர்களை கூட வழியனுப்பி வைக்க முடியவில்லை. இதுபோன்ற கடுமையான வேதனைகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் ஊரடங்கு 100 நாட்களில் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

100 நாட்கள் ஊரடங்கு குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

கல்லூரி மாணவி கியூபா

ஊரடங்கு ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாளடைவில் அது கடினமாக இருந்தது. கல்லூரி வகுப்புக்கு செல்ல முடியவில்லை. பரிசோதனை கூடங்களில் ஆராய்ச்சிகளை செய்து பார்க்க முடியவில்லை என்று சிரமமாக இருந்தது. முன்பு எப்போது விடுமுறை கிடைக்கும் என்று எதிர்நோக்கி இருந்தேன். ஆனால் தற்போது ஒவ்வொரு நாளையும் கழிப்பது கஷ்டமாக உள்ளது.

ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினாலும் அது எல்லோருக்கும் வசதியாக இல்லை. நான்கு சுவற்றுக்குள் மாட்டிக்கொண்டு தவிப்பதால், இப்போது மீண்டும் கல்லூரிக்கு செல்லும் நாட்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த கல்வி ஆண்டு முடிந்து விட்டாலும் அடுத்த கல்வி ஆண்டு எப்படி இருக்க போகிறதோ? என்ற பயம் தான் அதிகமாக உள்ளது.

தஞ்சை வக்கீல் சங்க செயலாளர் கீர்த்திராஜ்

கொரோனா நீதித்துறையை முற்றிலும் செயல்படாமல் வலுவிழக்க செய்கிறது. எனவே தற்போது உள்ள நீதிபரிபாலனத்தில் அதிகப்படியான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். வீடியோ கான்பரன்சிங் மூலம் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதனால் வழக்கமாக நீதிமன்றத்தில் நடைபெறும் நடைமுறை அனைத்தும் முற்றிலுமாக முடங்கி விட்டது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்களே.

அதே சமயத்தில் மனைவி, மகன் உடன் நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனிமேல் இதுபோல இத்தனை நாட்கள் மனைவி, மகன் உடன் செலவிட கிடைக்கப்போவது இல்லை. இது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

செவிலியர் வளர்மதி

கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள் வீட்டிற்கு செல்வது இல்லை. நாங்கள் கொரோனா வார்டில் விருப்பமுடன் பணியாற்றி வருகிறோம். பெரும்பாலான செவிலியர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்களிடம் கொடுத்து விட்டுத்தான் பணியாற்றி வருகிறார்கள்.

இதுபோன்ற பேரிடரில் மக்களை காப்பாற்றுவது மட்டுமே எங்கள் நோக்கம். இதற்காக பாசத்தை புறக்கணித்துவிட்டு சேவை ஒன்றையே குறிக்கோளாக கருதி செயல்படுகிறோம். மக்கள் சேவையை மட்டுமே இந்த ஊரடங்கு எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

குடும்ப தலைவி தேன்மொழி

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலும் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அனைவருக்கும் சேர்த்து சமையல் செய்வது என்பது கஷ்டமாக இருந்தது. கடைகளுக்கு சென்றாலும் பொருட்களை வாங்கிக்கொண்டு உடனடியாக வீட்டிற்கு வரமுடியவில்லை.

மேலும் முககவசம் அணிவதும் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. உறவினர்களை சந்திக்க கூட முடியவில்லை. எங்கு வெளியில் சென்றால் கொரோனா வந்து விடுமோ? என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம்.

சிவா

ஊரடங்கினால் எனது நண்பர்களை கூட சென்று சந்திக்க முடியவில்லை. கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியவில்லை. ஜாலியாக அரட்டை அடிக்க முடியவில்லை. குடும்பத்தோடு ஓட்டலுக்கு சென்று சாப்பிட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. வெளி உலகத்தை மீண்டும் எப்போது எட்டிப்பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News