செய்திகள்
சரக்கு ரெயில்

சரக்கு ரெயிலில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

Published On 2020-06-19 10:13 GMT   |   Update On 2020-06-19 10:13 GMT
கரூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் இருந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
கரூர்:

மதுரையிலிருந்து டிராக்டர் களை ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 8.30 மணியளவில் கரூர் ரெயில் நிலையம் அருகே பாலம்பாள் புரம் அமராவதி ஆற்று பாலத்தில் வந்த போது, என்ஜின் டிரைவர் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக என்ஜினில் இருந்து 2-வதாக இருந்த பெட்டியை இணைக்கும் கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. எனினும் ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை. டிரைவர் சுதாரித்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு என்ஜினை நிறுத்தினார். பின்னர் இது குறித்து கரூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து, அந்த 2-வது ரெயில் பெட்டியை தனியாக கழற்றினார்கள். பின்னர் மற்ற ரெயில் பெட்டிகளை என்ஜினில் இருந்த பெட்டியோடு இணைத்தனர். சுமார் 11.15 மணியளவில் அந்த சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே காலை 10 மணியளவில் கோவையிலிருந்து மயிலாடுதுறையை நோக்கி வந்து கொண்டிருந்த ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் 1 மணி 15 நிமிடம் தாமதமாக கரூரிலிருந்து புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Tags:    

Similar News