செய்திகள்
ஜிகே வாசன்

கொரோனாவை ஒழிக்க மக்கள் 100 சதவீதம் ஒத்துழைக்க வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2020-06-01 07:07 GMT   |   Update On 2020-06-01 07:07 GMT
கொரோனாவை ஒழிக்க தமிழக மக்கள் அனைவரும் விதிமுறைகளை, வழிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

சென்னை:

த.மா.கா. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக, நாட்டின் பொருளாதாரம் உயர தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவது மக்கள் நலன் காக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் விவேகமான, விரைவான நடவடிக்கைகளால் கொரோனா பரவலும், பாதிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆயினும் அதற்கு எதிரான போர் இன்னும் தொடர வேண்டியுள்ளது.

கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்காக மார்ச் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு 4 முறை அமல்படுத்தப்பட்டது. 4 ஆம் கட்ட ஊரடங்கு நேற்று 31.05.2020 முடிவடைந்தது. இந்த 4 ஊரடங்கு காலமான 69 நாட்களில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடமை உணர்வோடு கடைபிடித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா தடுப்புக்கு உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால் நோயைக் கட்டுப்படுத்துவது சவாலானப்பணியாக இருக்கிறது.ஆனாலும் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை மேலும் கட்டுக்குள் கொண்டுவந்து முழுமையாக ஒழிப்பதற்கும், பொது மக்களின் சிரமத்தை குறைக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எனவே தமிழக மக்கள் மத்திய மாநில அரசுகள் இப்போது நீட்டித்திருக்கிற ஊரடங்கை கடைபிடிக்கும்போது வழிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற வேண்டும்.

மேலும் அவசிய, அத்தியாவசியத்திற்கு தவிர தேவையற்ற பயணத்தை தவிர்த்து கொரோனா பரவலில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும், வருங்கால சந்ததியினருக்கு நல்வாழ்க்கை அமைத்துக்கொடுக்கவும் முன்வர வேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெற தமிழக மக்கள் அனைவரும் விதிமுறைகளை, வழிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News