செய்திகள்
ஜிகே வாசன்

முதல்-அமைச்சரின் அறிவிப்பு கொரோனா பணியாளர்களுக்கு ஊக்கம் தரும்: ஜி.கே.வாசன் பாராட்டு

Published On 2020-04-24 09:59 GMT   |   Update On 2020-04-24 09:59 GMT
கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவிடும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்போது கொரோனா தாக்கத்தால் ஏழை, எளிய மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கூலித் தொழிலாளர்கள், சாலையோரம் வசிக்கும் மக்கள் உணவுக்காக சிரமப்படுகிறார்கள்.

இதனை கவனத்தில் கொண்ட அரசு கடந்த 23-ந்தேதி முதல் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளது அது பாராட்டத்தக்கது.

மேலும் “கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மருத்துவத்துறை மட்டுமின்றி காவல் துறை, உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்களில் எவர் இறந்தாலும் அவரின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

உயிரிழக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்துத் துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு பணியின்போது அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் இறந்தால், அவர்களின் பணியை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் உயிரிழக்கும் பணியாளர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும்” என்றும் முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.

இந்த அறிவிப்பு கொரோனா தடுப்புக்கான பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ஊக்கம் தரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News