செய்திகள்
துரை முருகன்

திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்?

Published On 2020-03-16 07:45 GMT   |   Update On 2020-03-16 07:45 GMT
திமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வில் போட்டியிடுவதற்காக துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை:

43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளர் யார் என  திமுகவில் கேள்வி எழுந்தது.  

தி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்.

கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.

துரை முருகனுக்கே அதிக வாய்ப்பு என்று கூறப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக அவர் தனது பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வரும் 29-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே துரை முருகன் தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
Tags:    

Similar News