செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்

சப்-இன்ஸ்பெக்டர் கொலை: மேலும் ஒரு பயங்கரவாதி பெங்களூருவில் கைது

Published On 2020-02-28 06:11 GMT   |   Update On 2020-02-28 06:11 GMT
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு பயங்கரவாதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:

களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த 2 பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய மேலும் பலரும் கைதானார்கள்.

இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து கொச்சி என்.ஐ.ஏ. அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களிடம் இந்த கொலை தொடர்பாக இதுவரை கிடைத்த ஆவணங்கள் அனைத்தையும் குமரி மாவட்ட போலீசார் ஒப்படைத்து உள்ளனர். மேலும் நாகர்கோவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவையும் கொச்சி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கொச்சி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக ஏற்கனவே பெங்களூருவில் மெகபூப்பாஷா என்ற பயங்கரவாதி என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 5 பேரும் கைதானார்கள்.

மெகபூப்பாஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவரது முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான பஷிவுர் ரகுமான் என்ற செய்யது பஷி பற்றிய முக்கிய தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெங்களூரு டி.ஜே. ஹள்ளி டேனரி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பஷிவுர் ரகுமான் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பஷிவுர் ரகுமானை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஷிவுர் ரகுமான் பற்றி பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பயங்கரவாத அமைப்பான அல்-ஹிந்த் அமைப்பின் கர்நாடக மாநில பொறுப்பாளரான மெகபூப் பாஷாவின் நேரடி ஆலோசனையின்படி பஷிவுர் ரகுமான் செயல்பட்டு வந்துள்ளார்.

வெடிகுண்டு தயாரிப்பது பற்றி பயிற்சி பெற்றுள்ள பஷிவுர் ரகுமான், அதற்கு தேவையான பொருட்களை வாங்கி சேகரித்து வைக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார். மேலும் அல்-ஹிந்த் அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பது, அவர்களுக்கு பெங்களூரு சாம்ராஜ் நகர் அருகே உள்ள குண்டலு பேட்டை, பந்திப்பூர் காட்டுப் பகுதியில் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டி ஆயுதங்கள் சப்ளை செய்பவராகவும் பஷிவுர் ரகுமான் இருந்துள்ளார். தென் மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்த அவர் திட்டமிட்டதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Tags:    

Similar News