செய்திகள்
மீட்கப்பட்ட சுமேஷ்

‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல் தவித்த வாலிபர்

Published On 2020-02-19 08:15 GMT   |   Update On 2020-02-19 08:15 GMT
‘செல்பி’ மோகத்தால் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை புளியரை பாதையையொட்டி இருக்கும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல் தவித்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர்.
செங்கோட்டை:

தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை புளியரை பாதையையொட்டி இருக்கும் பெரும்பகுதி அடர்ந்த வனங்கள் நிறைந்த மலைப்பாதையாகும். இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடி உயரம் கொண்டது. இங்கு மான், மிளா, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் ரோஸ் மலை என்ற சுற்றுலா தலம் உள்ளது.

இந்நிலையில் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (வயது 23), அவருடைய நண்பர் அஜேஷ் (22) ஆகிய இருவரும் இப்பகுதியை சுற்றி பார்க்க நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் இருவரும் ‘செல்பி’ மோகத்தால் சற்று தூரம் உள்ளே சென்றுள்ளனர். அங்கு செல்போனில் ‘செல்பி‘ எடுக்க முயன்றபோது புளியரை அருகே உள்ள வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஏதே ஒரு வனவிலங்கு அவர்களை தாக்க வருவதை கண்டனர்.

இதையடுத்து இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வெவ்வேறு திசைக்கு தப்பி ஓடினார்கள். பல மணி நேரம் கழித்து நீண்ட போராட்டத்துக்கு பின் அஜேஷ் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால் சுமேஷ் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்றதால் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால் விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து சுமேஷ் மரத்தின் மேல் ஏறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வனத்துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியோடு சுமேசை தீவிரமாக தேடினர். நள்ளிரவு வரை தேடியும் மாயமான அவரை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர்.

நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்த பினு, பினிஷ், மனேஸ், விஷ்ணு சைசூ மற்றும் பொதுமக்கள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அங்கு மயங்கிய நிலையில் கீழே விழுந்து காயத்துடன் கிடந்த சுமேசை மீட்டு தென்மலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பெற்றோருக்கு தகவல் அளித்து சுமேசை அவர்களிடம் ஒப்படைத்தனர். மோட்டார்சைக்கிளையும் மீட்டனர். சுமேசை வனப்பகுதியில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்த பொதுமக்களை அனைவரும் பாராட்டினர். மேலும் எங்களது ஒரே மகன் சுமேசை பத்திரமாக மீட்டதற்கு நன்றி என சுமேசின் பெற்றோர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News