செய்திகள்
கைது

அண்ணாநகர் பகுதியை கலக்கிய மகாராஷ்டிரா கொள்ளையன் கைது

Published On 2020-02-17 08:28 GMT   |   Update On 2020-02-17 08:28 GMT
அண்ணாநகர் பகுதியை கலக்கிய மகாராஷ்டிரா கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் அண்ணா நகர், திருமங்கலம், அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடை பெற்றன.

இந்த சம்பவங்களில் ஒரே நபர்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணாநகர் துணை கமி‌ஷனர் முத்துசாமி ஆகியோரது மேற்பார்வையில் செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

திருமங்கலம் உதவி கமி‌ஷனர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜன், ஏட்டுகள் ரவி, ஜோசப், போலீஸ்காரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த தனஞ்செழியன், அருள் ஆகியோரும் தனிப்படை போலீசாருக்கு உதவி செய்தனர்.

செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த கேமிராக்கள் மற்றும் அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் உள்ள 60 கேமிராக்களை போட்டு பார்த்து துப்பு துலக்கினர். இதில் ஆந்திர பிரதேச பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் கொள்ளையன் சுற்றும் வீடியோ கிடைத்தது.

இதனை வைத்து அடுத்த கட்ட முயற்சிகளில் போலீசார் இறங்கினர். கொள்ளையன் வட மாநிலத்தைச் சேர்ந்தவன் போல இருந்ததால் அவனது புகைப்படங்களை வைத்து ஐதராபாத், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தனிப்படை போலீசார் 2 நாட்களாக தூக்கத்தை தொலைத்து செயல்பட்டனர். ஏராளமான போன் நம்பர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.

அண்ணா நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்ளையனை பிடிக்க போலீசார் ரகசிய கண் காணிப்பிலும் ஈடுபட்டனர்.

இதில் செயின் பறிப்பு கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் அமோல் பாலா சாகிப் ஹிண்டே என்பது தெரிய வந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவன் ஆந்திர மாநிலத்திலும் கைவரிசை காட்டி, அங்கு செல்ல பள்ளி சிறையில் இருந்துள்ளான். கடந்த ஜூலை மாதம் சிறையில் இருந்து வெளி வந்த அமோல் பாலா, சென்னை வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சிறையில் இருந்தபோது சக கைதி ஒருவன் கூறிய ஆலோசனையின் பேரிலேயே வசதியானவர்கள் வசிக்கும் பகுதியான அண்ணாநகர் பகுதியை செயின் பறிப்புக்கு தேர்வு செய்ததாக கொள்ளையன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஆந்திராவில் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்னை வந்து அதில் ஊர் சுற்றியே அவன் செயின் பறிப்பில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News