செய்திகள்
முத்தரசன்

தன்னை தற்காத்து கொள்ளவே ரஜினி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசுகிறார்- முத்தரசன்

Published On 2020-02-08 05:14 GMT   |   Update On 2020-02-08 05:14 GMT
ரஜினிகாந்த் தன்னை தற்காத்து கொள்ளவே குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசி உள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நெல் கொள்முதல் நிலையங்களில் போதியளவு சாக்கும், சணலும் இல்லாத நிலை உள்ளது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. இவற்றிற்கு மேலாக விவசாயிகளிடம் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.40 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. அதேப்போல ஒரு மூட்டைக்கு 2 கிலோ நெல்லை அங்கு வேலைபார்க்கும் பணியாளர்கள் எடுத்து கொள்கின்றனர்.

இப்படி நெல்கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறந்து போதிய அளவுக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

பழங்குடியின சிறுவனிடம் தன்னுடைய காலணியை கழற்றி விடுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது கண்டிக்கத்தக்கது. இந்த செயலுக்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும், உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பு விசாரணையும் நடத்தப்பட வேண்டும். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான வரித்துறை மத்திய அரசின் பினாமியாக மாறிவிட்டது. நடிகர் விஜய் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசியிருந்தால் அவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்க மாட்டார்கள்.

ரஜினி தன்னை தற்காத்து கொள்ளவே குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News