செய்திகள்
கோப்பு படம்

ரூ.8 கோடி மோசடி வழக்கு - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.விடம் விசாரணை

Published On 2020-02-06 11:44 GMT   |   Update On 2020-02-06 11:44 GMT
ஆரணியில் ரூ.8 கோடி பண மோசடி குறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது71). தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

ஆரணியில் இவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த அரிசி ஆலையை அடகு வைத்து கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.8 கோடி கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பண மோசடி குறித்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சிவானந்தம் மீது புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு திருவாண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிவானந்தம் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிவானந்தத்தை விசாரணைக்காக திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றனர்.

எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News