செய்திகள்
போலீசார் முன்னிலையில் கைகளை உயர்த்தி உறுதிமொழி ஏற்றவர்களை படத்தில் காணலாம்.

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை

Published On 2020-02-01 06:01 GMT   |   Update On 2020-02-01 06:01 GMT
திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு உறுதிமொழி ஏற்க வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

திண்டுக்கல்:

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க கோரியும் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இருந்த போதும் ஹெல்மெட் அணியும் பழக்கத்தை பொதுமக்கள் இன்னும் முழுமையாக கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி மற்றும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த சமயத்தில் பஸ்நிலையம் அருகே டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த அனைவரையும் பஸ் நிலையம் அருகே உள்ள டட்லி பள்ளிக்குள் நிற்க வைத்தனர். சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் அனைவரும் அதே இடத்தில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் போலீசார் தெரிவிக்கையில், ½ மணி நேரம் நீங்கள் உரிய இடத்துக்கு செல்ல வில்லை என்பதால் உங்களுக்காக காத்திருப்பவர்கள் இந்த சமயத்தில் எந்த மன நிலையில் இருப்பார்கள்? என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த ½ மணி நேரத்தில் நிரந்தரமாக நீங்கள் வீட்டுக்கு செல்லாமல் உயிரிழப்பை சந்தித்திருந்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதையும் உணர வேண்டும். எனவே ஹெல்மெட் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் தலைக்கவசம் அணிவோம், சாலை விதிகளை கடைபிடிப்போம் என்று போலீசார் கூற அதனை பொதுமக்களை திரும்ப கூறச் சொல்லி அனைவரையும் உறுதிமொழி ஏற்க வைத்தனர்.

திண்டுக்கல்லில் போலீசார் ஏற்படுத்திய இந்த நூதன விழிப்புணர்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News