செய்திகள்
கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி

கூடங்குளம் அருகே கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு

Published On 2019-12-23 06:20 GMT   |   Update On 2019-12-23 06:20 GMT
கூடங்குளம் அருகே கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களிடம், கேரளா கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கூடங்குளம்:

கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள், எலெக்ட்ரிக்கல் கழிவுகள் போன்றவைகளை தமிழகத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதனை போலீசார் சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும் கோழிக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் பகுதியில் இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உள்ள ஓடைகளில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதனை அப்பகுதியினர் தடுத்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று அதிகாலை அந்த வழியாக 2 கண்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வண்டியில் இருந்து சாலையில் ரத்தம் கொட்டிக்கொண்டே சென்றது. அதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் கண்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து சென்று மறித்தனர். அந்த கண்டெய்னரில் கோழிக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதையறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்து வண்டியில் வந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர். பின்னர் ஒரு வண்டியின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கண்டெய்னர் லாரி செல்ல அனுமதிக்காமல் அதனை சிறைபிடித்தனர்.

இது குறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்டெய்னரை ஓட்டி வந்தவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 54) என்பதும், கிளீனர் நாகர்கோவிலை சேர்ந்த மூர்த்தி (36) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்டுவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்பதும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் சிறைபிடிப்பில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கேரளா கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News