செய்திகள்
கோப்பு படம்

செல்போனில் சொன்னால் தேடி வந்து கஞ்சா சப்ளை - 3 பேர் கைது

Published On 2019-11-19 09:27 GMT   |   Update On 2019-11-19 09:27 GMT
சென்னையில் இருக்கும் இடத்துக்கே தேடி வந்து கஞ்சா சப்ளை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் கஞ்சாவுடன் வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், போலீசார் வண்ணாரப்பேட்டை போஜராஜா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள மைதானத்தில் சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரணை செய்தபோது, செல்போன் மூலம் ஆர்டர் செய்து கஞ்சா வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாரும் குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்து அவர்கள் இருந்த இடத்தை சொல்லி கஞ்சா கொண்டு வரும்படி கேட்டனர்.

சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ அங்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய 3 பேர் கஞ்சா விற்க வந்ததாகவும், போனில் ஆர்டர் செய்தது யார் என்றும் விசாரித்தனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் ஆட்டோவில் கஞ்சா கொண்டு வந்தது திருவான்மியூரைச் சேர்ந்த ராஜா என்கிற குள்ள ராஜா (35), புளியந்தோப்பு சாஸ்திரிநகர் சுதாகர் (26), மணலி தில்லைநகர் சூர்யா (32) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவுடன் வந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமாபுரம் ஆண்டவர் நகர் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தேகப்படும் விதத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ராமாபுரம் வினோத்குமார் (35) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து 1கிலோ 225 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வடமாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் கைதான வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ராமாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடி சுரேஷின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற கோபியை போலீசார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி குமரன் நகரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரமேசையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News