செய்திகள்
மூலஸ்தானத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை

விருதுநகர் மாவட்டத்தில் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்

Published On 2019-11-09 10:33 GMT   |   Update On 2019-11-09 10:33 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-ம் ஆண்டு திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சன்னதியில் திருவள்ளுவர் சிலை அமைத்து தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
விருதுநகர்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா இணைய தளத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்ததுபோன்று படம் பதிவிடப்பட்டது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவள்ளுவரை காவி மயமாக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம மனிதர்கள் அவமதித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேனி அருகே பெரிய குளத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையும் அவமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலக பொதுமறை அளித்த திருவள்ளுவருக்கு சத்தமே இல்லாமல் ஒரு கிராமம் கோவில் கட்டி திருவிழா நடத்தி கொண்டாடி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-ம் ஆண்டு திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சன்னதியில் திருவள்ளுவர் சிலை அமைத்து தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

ஜனவரி மாதம் வரும் திருவள்ளுவர் தினத்தன்று இந்த கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது. மேலும் மாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று திருவள்ளுவர் கோவிலில் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போது பி.புதுப்பட்டி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவரை வழிபடுவார்கள். முளைப்பாரி வீதி உலா போன்றவையும் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News