செய்திகள்
மு.க.ஸ்டாலின்- வைகோ

அயோத்தி வழக்கு தீர்ப்பு- அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Published On 2019-11-09 09:36 GMT   |   Update On 2019-11-09 09:36 GMT
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் தீர்ப்பை மதித்து அமைதி காத்து மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
சென்னை:

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமல் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துத்துள்ளது. அதேசமயம், முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பை வழங்கியுள்ள பின்னர், அதை ஏற்றுக்கொண்டு அனைத்து தரப்பினரும் சமமான மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.



பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்; யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாத தீர்ப்பு, என்றார். 

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும், அனைவரும் மதிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும். 

இந்த நேரத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு, சாட்சிகளையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை என அகில இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஒய்.ஜாஹூரூத்தின் அஹமது கூறியுள்ளார்.  

‘உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பில் முரண்பட்ட பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதை காணமுடிகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அந்த வகையில் நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டியது, நாட்டின் ஓவ்வொரு குடிமகனின் கடமை என்ற அடிப்படையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு இஸ்லாமியர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்’ என ஒய்.ஜாஹூரூத்தின் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .

வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அமைத்த சமரசக்குழுவில் இடம்பெற்றவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீதிமன்றம் நீதி வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News