செய்திகள்
பூண்டி ஏரி

பலத்த மழை - பூண்டி ஏரி பாதி நிரம்பியது

Published On 2019-10-31 06:36 GMT   |   Update On 2019-10-31 06:36 GMT
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 29.60 அடியாக பதிவாகியது. பூண்டி ஏரி பாதி அளவு நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 25-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 1300 கனஅடியாக குறைக்கப் பட்டது.

பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்தால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 11-ந் தேதி புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.60 அடியாக பதிவாகியது. 1648 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரி பாதி அளவு நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு வாரத்தில் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும்.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 516 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 23 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் 549 கனஅடியும், மழை நீர் வினாடிக்கு 771 கனஅடி வீதமும் வந்து கொண்டு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 121 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இப்போது 708 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 520 கனஅடி தண்ணீர் வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். இதுவரை வறண்டு கிடந்த இந்த ஏரியில் வெறும் 44 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 81 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது.

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து 2521 மி.கனஅடி (2½ டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் 1779 மி.கனஅடி நீர் மட்டுமே இருந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு முதல் முறையாக ஏரிகளில் நீர் இருப்பு 2 டி.எம்.சி. அளவை கடந்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 20-ந் தேதி வரை தினமும் 53 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய்கள் மூலமாக வினியோகிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கிருஷ்ணா நீர்வரத்து, வடகிழக்கு பருவமழை காரணமாக 21-ந் தேதி முதல் குடிநீர் வினியோகம் 65 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 2 வாரங்களில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் மொத்தம் 1 டி.எம்.சி.க்கு மேல் நீர் அதிகரித்துள்ளது.

ஏரிகளில் தற்போது உள்ள 2½ டி.எம்.சி. தண்ணீர் மூலம் சென்னை மக்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான குடிநீரை தடையின்றி வழங்க முடியும்’’ என்றனர்.

Tags:    

Similar News