செய்திகள்
பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானை

பழனி அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானை - விவசாயிகள் அச்சம்

Published On 2019-10-12 05:02 GMT   |   Update On 2019-10-12 10:26 GMT
பழனி அருகே கோம்பைபட்டியில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானை விளைபயிர்களை சேதப்படுத்தி சென்றது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

பழனி:

பழனியை அடுத்த ஆயக்குடி அருகே கோம்பைபட்டி கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியாகும். இங்கு ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்துவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக யானைகள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அப்பகுதியில் யானை ஒன்று விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். மூலக்கடை பகுதியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னை, கரும்பு, வாழை பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

நேற்று காலை வேலுச்சாமி வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பயிரிட்டிருந்த தென்னை மரம், வாழை மரங்கள் முறிந்து நிலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் அந்த இடத்தில் யானையின் கால்தடம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

கோம்பைப்பட்டி பகுதியில் மீண்டும் யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News