செய்திகள்
ஏற்காடு

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: ஏற்காடு-மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2019-10-08 04:38 GMT   |   Update On 2019-10-08 04:38 GMT
ஆயுத பூஜை தொடர் விடுமுறையான விஜயதசமியையொட்டி இன்று அதிகாலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
சேலம்:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையான விஜயதசமியையொட்டி இன்று அதிகாலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா பகுதிகளான பக்கோடா பாயிண்ட், லேடீஸ் ஷீட், ஜென்ஸ் ஷீட், ரோஜா தோட்டம், படகு இல்லம், கிளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில் ஆகிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஏற்காட்டில் வானம் மேக மூட்டமாக காட்சி அளிப்பதுடன் சில நேரங்களில் மழையும் பெய்வதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மான் பூங்கா, ரோஜா தோட்டங்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காட்டில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேட்டூர் அணை பூங்காவில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அவர்கள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்ததுடன் அணை முனியப்பனை வழிபட்டனர். பின்னர் அணை பூங்காவில் வைத்து தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் சின்ன பூங்கா நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29-ந் தேதி திறந்து வைத்தார். இந்த பூங்கா நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை பூங்கா திறந்திருக்கும்.

இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு திடலில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். இதனால் இந்த பூங்காவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சித்தர் கோவில், ஊத்துமலை, சேலம் அண்ணா பூங்கா உள்பட பல பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Tags:    

Similar News