செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக அரசு பழிவாங்குகிறது- கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On 2019-10-05 04:35 GMT   |   Update On 2019-10-05 04:35 GMT
பொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி,அக்.5-

திருச்சி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர் களிடம் கூறியதாவது:-

முழுக்க முழுக்க அரசு காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது. இதற்கு என் தந்தை ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் உதாரணங்கள்.

பொதுமக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் பெயரை களங்கப்படுத்தவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு வழக்குகளை பதிவு செய்து விசாரணைக்கு அழைத்து பின்னர் கைது செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.

குறிப்பாக மத்திய அரசை விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்கின்றனர். இதன்படியே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, ராவத் மற்றும் சரத்பவார் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு பாயும். இதுதான் பா.ஜ.க.வின் தந்திரம். அதே வேளையில் பா.ஜ.க.வில் இணைந்து விட்டால் அவர்கள் புனிதர்களாகி விடுவார்கள்.

இந்தியாவில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை எத்தனை ஆண்டுகள் வேண்டு மானாலும் விசாரிக்கலாம். இது சட்டத்தில் உள்ள ஓட்டை. இந்த ஓட்டையை எதிர்க்கட்சிகளை துன்புறுத்த மத்திய அரசு பயன்படுத்தி கொள்கிறது. அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது. அரசு பேனர் வைக்கலாம் என்ற தீர்ப்பு விசித்திரமானது. அரசு வைக்கும் பேனர் காற்றில் விழாதா? என்றார்.

Tags:    

Similar News