செய்திகள்
பொன். ராதாகிருஷ்ணன்

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-09-27 04:28 GMT   |   Update On 2019-09-27 04:28 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -

அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜ.க. உள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. தலைமை முடிவின்படி செயல்படுவோம். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது பற்றிய செய்திகள் தவறானவை. அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை. தமிழகத்தில் பா.ஜனதா வலிமையாக உள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இதற்கு முந்தைய ஆண்டில் நாடு அடைந்த வளர்ச்சியையும் பார்க்க வேண்டும். தொழில்துறை, பிற துறைகளில் நமது நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை விமர்சிப்பது சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்களுக்கு அழகில்லை.

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக-கேரள முதல்-அமைச்சர்கள் சந்திப்பு வரவேற்க வேண்டியது. இதற்காக அமைக்கப்படும் குழுவினர், தமிழகத்தின் உரிமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தமிழகத்துக்கு பயன் தரும். ஆனால் தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பயன் தராது.

உலக அரங்கில் இந்தியாவை அனைத்து நாடுகளும் மதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். இதனை பொறுத்து கொள்ளாத பயங்கரவாதிகளால் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News