செய்திகள்
விபத்தில் சிக்கிய வேன் சேதமடைந்து நிற்கும் காட்சி.

வத்தலக்குண்டு அருகே விபத்து- பெண் என்ஜினீயர் பலி

Published On 2019-09-10 05:29 GMT   |   Update On 2019-09-10 05:29 GMT
வத்தலக்குண்டு அருகே இன்று காலை நடந்த விபத்தில் கணவர் கண்முன்னே பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வத்தலக்குண்டு:

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி ஞானாம்பிகை (வயது26). இவர் மதுரை சொக்கலிங்கநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் கர்சிவ் (4). உதயகுமார் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் 4 பேருடன் பாப்பாபட்டியில் உள்ள தங்களது குலதெய்வமான ஒச்சாண்டர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர்.

வேனில் வந்த இவர்கள் இன்று அதிகாலை வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். வேனை உதயகுமார் ஓட்டி வந்தார்.

அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு வேனை கவனிக்காமல் அதன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. உதயகுமார், ஞானாம்பிகை மற்றும் அவர்களது குழந்தை படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து விருவீடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 7 பேரையும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு ஞானாம்பிகை சிகிச்சை பலனின்றி தனது கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். உதயகுமாரும் அவரது மகனும் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News