செய்திகள்
கொலை

எர்ணாகுளம் அருகே சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது

Published On 2019-08-26 10:10 GMT   |   Update On 2019-08-26 10:10 GMT
எர்ணாகுளம் அருகே சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள கோத்தப்பட்டியை சேர்ந்தவர் குட்டப்பன். இறந்து விட்டார். இவரது மனைவி கார்த்தியாயினி(வயது61). இவர்களது மகன் அனில்குமார்(34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கார்த்தியாயினிக்கு சொந்தமாக 7 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி தரும்படி அனில்குமார் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று மாலையும் அனில்குமார் தனது தாயிடம் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி தருமாறு கூறியுள்ளார். ஆனால் கார்த்தியாயினி மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனில் குமார் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார். கார்த்தியாயினி இரவு 7 மணியளவில் தூங்க சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த அனில்குமார் வீட்டிற்கு வந்து அங்கு தூங்கி கொண்டிருந்த தாயை அரிவாளால் வெட்டினார். பின்னர் அனில்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் கார்த்தியாயினிக்கு கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோதமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோத்தப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அனில்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News